தலைப்புச் செய்திகள்

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு நீண்ட நாட்களின் பின்னர் பிணை

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று (03) நீண்ட நாள் விளக்க மறியலின் பின்னர் பிணை வழங்கியது.

கிரிபத்கொடயிலுள்ள அரச நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேர்வின் சில்வா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிணை விண்ணப்பம் கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி டப்ளியூ. கே. டி. விஜேரத்ன முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

இதன்போது மேர்வின் சில்வா, ஜெயந்த கப்ரால் மற்றும் நவீன் வீரகோன் ஆகிய மூன்று பிரதிவாதிகளுக்கும் பிணை வழங்கப்பட்டது.

அவர்கள் ஒவ்வொருவரும் 02 லட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 05 லட்சம் ரூபாய் – ஐந்து தனிப்பட்ட சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டனர். மேலும், அவர்களுக்கு வெளிநாட்டு பயணத் தடைகளையும் நீதிமன்றம் விதித்தது.

சாட்சிகள் மீது செல்வாக்குச் செலுத்துவதைத் தவிர்க்குமாறு பிரதிவாதிகளுக்கு கடுமையாக எச்சரித்த நீதிமன்றம், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளது.

கிரிபத்கொடையில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் – தனியாருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.