தலைப்புச் செய்திகள்

ஷிரந்தியை காப்பாற்ற மஹிந்த முயன்றாரா?: நாமல் விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ – தனது குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்காக, மூத்த பௌத்த மதகுருமார்களின் (வணக்கத்திற்குரிய மகாநாயக்க தேரர்கள்) தலையீட்டை நாடுவதாகக் கூறப்படும் சமீபத்திய செய்திகளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார். இந்தக் கூற்றுக்கள் முற்றிலும் தவறானவை என்றும், மரியாதைக்குரிய மதத் தலைவர்களை அரசியல் சர்ச்சைகளில் இழுக்கும் அவமானகரமான முயற்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ நேற்று (29) வெளியிட்ட ஓர் அறிக்கையில் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை தனது முதல் வருட ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றத் தவறியதாக விமர்சிக்கப்படுவதை – திசைதிருப்பும் முயற்சியாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை உள்ளடக்கிய குற்றச்சாட்டுகளை அரசாங்கம் புனைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கை வருமாறு;

முதல் வருடத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசாங்கம், இப்போது அதன் தோல்விகளை மறைக்க தீவிரமாக முயற்சிக்கிறது. மறைக்கும் முயற்சியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ – தனது குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்காக, வணக்கத்திற்குரிய மகாநாயக்க தேரர்களின் உதவியை நாடுகிறார் என்ற பொய்யான விடயங்களைப் பரப்புவதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இது முன்னாள் ஜனாதிபதி மீதான தாக்குதல் மட்டுமல்ல, மிகவும் மதிக்கப்படும் நமது மதத் தலைவர்களை அரசியல் சேற்றில் இழுக்கும் அவமானகரமான முயற்சி. இத்தகைய நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை.

இந்தக் கூற்றுக்கள் முற்றிலும் தவறானவை, மேலும் அரசாங்கம் பொலிஸ் துறையையும் நீதித்துறையையும் கூட அரசியலாக்க முயற்சிப்பதை தெளிவாக அம்பலப்படுத்துகின்றன. இதனால் எனது குடும்ப உறுப்பினர்களை பொய்யாக சிக்க வைக்க முயற்சிக்கப்படுகிறது.

நானும் எனது குடும்பத்தினரும் தொடர்ந்தும் அரசியல் ரீதியான விசாரணைகளை அச்சமின்றி எதிர்கொண்டோம். மேலும், நாட்டின் நீதித்துறை அமைப்பில் எங்கள் முழு நம்பிக்கையையும் தொடர்ந்தும் வைத்திருக்கிறோம்.

பொதுமக்களை அரசாங்கம் தவறாக வழிநடத்துவதை நிறுத்திவிட்டு, அது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்க வேண்டிய நேரம் இது. தவறான பிரச்சாரங்கள், நற்பெயர்களை சிதைத்தல் மற்றும் சட்ட அமுலாக்கத்தை அரசியல்மயமாக்குதல் ஆகியவை பெரும்பாலும் தேசிய மக்கள் சக்தியுடன் தொடர்புடைய தந்திரோபாயங்களாகும்.

தங்கள் சொந்த தோல்விகள் மற்றும் தவறான செயல்களை மறைப்பதற்கான, அவர்களின் விரக்தியை மட்டுமே இவை வெளிப்படுத்துகின்றன.

தொடர்பான செய்தி: ஷிரந்தியின் கைதை தடுக்க, மல்வத்து மகா நாயக தேரரின் உதவியை மஹிந்த நாடியதாக தகவல்