தலைப்புச் செய்திகள்

ஹர்சன சூரியபெரும, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜிநாமா: நிதியமைச்சின் செயலாளராவார் என எதிர்பார்ப்பு

பிரதி நிதியமைச்சர் கலாநிதி ஹர்சன சூரியபெரும – நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட வெற்றிடம் குறித்து – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சருமான கலாநிதி ஹர்சன சூரியபெரும, தனது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீரவிடம் சமர்ப்பித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன சூரியபெரும சமர்ப்பித்த கடிதத்தின்படி, இந்த ராஜினாமா இன்று ஜூன் 20, 2025 முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, 1981 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 64(5) இன் படி, பத்தாவது நாடாளுமன்றத்தில் கலாநிதி ஹர்ஷ சூரியப்பெரும வகித்த பதவி இப்போது வெற்றிடமாக உள்ளது என்று, தேர்தல் ஆணைக்குழுத் தலைவருக்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராகப் பணியாற்றிய கலாநிதி ஹர்சன சூரியபெரும, நிதி அமைச்சின் புதிய செயலாளராகவும், திறைசேரி செயலாளராகவும் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன இந்த மாத இறுதிக்குள் அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.