
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று, அமெரிக்காவின் தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் ருல்சி கப்பார்ட் (Tulsi Gabbard) கூறியமைக்காக, அவரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாகக் கண்டித்துள்ளார். மேலும் அவர் கூறியமை தவறு எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அரசியல் நாடகத்தைத் தூண்டுவதற்காக ஊடகங்கள் வேண்டுமென்றே தனது கருத்துக்களை தவறாக சித்தரிப்பதாக துல்சி கப்பார்ட் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரான் விரைவில் அணு ஆயுதத்தை தயாரிக்க முடியும் என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நேர்மையற்ற ஊடகங்கள் வேண்டுமென்றே எனது சாட்சியத்தை சூழலில் இருந்து வெளியே எடுத்து, பிளவுகளை உருவாக்குவதற்கான ஒரு வழியாக போலி செய்திகளைப் பரப்புகின்றன,” என்று துல்சி கப்பார்ட் X இல் பதிவிட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க, இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்திற்குள் ‘கதிரியக்க மற்றும் வேதியியல் மாசுபாட்டிலிருந்து’ ஆபத்து இருப்பதாக – சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) எச்சரித்துள்ளது. ஆனால் தற்போது தளத்திற்கு வெளியே கதிரியக்கத்தன்மையில் எந்த மாற்றமும் இல்லை.
மறுபுறமாக, ஈரானின் அணுசக்தி திட்டம் அமைதியானது என்றும், தனது நாடு ராஜதந்திரத்துக்காகத் திறந்திருக்கிறது என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி கூறியுள்ளார். ஆனால் இஸ்ரேலின் தாக்குதல்கள் முதலில் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவற்றுக்கிடையில் ஈரான் இன்று (21) அதிகாலை மத்திய இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இதனால் ஹோலோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதேவேளே, ஈரானின் இஸ்ஃபஹான் உட்பட பல இடங்களில் இஸ்ரேலிய தாக்குதல்கள் நடந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த இடம் அணு ஆராய்ச்சி மையத்தின் முக்கியமான பகுதியாகும்.



