தலைப்புச் செய்திகள்

கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளராக அஸ்மி நியமனம்: உள்ளூராட்சி ஆணையாளர் பதவிக்கு மேலதிகமாக மற்றுமொரு பொறுப்பு

கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் செயலாளராக – ஏ.எல்.எம். அஸ்மி நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் இன்று (17) இந்த நியமனத்தை வழங்கினார்.

இலங்கை நிர்வாக சேவையில் விசேட தரத்தைக் கொண்ட – சிரேஷ்ட அதிகாரி ஏ.எல்.எம். அஸ்மி, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக பதவி வகித்து வரும் நிலையில், மேற்படி செயலாளர் நிமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, செயலாளர் அஸ்மி – விவசாய அமைச்சில் கடமையைப் பொறுப்பேற்றார்.

பொத்துவில், அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர், அக்கரைப்பற்று மாநகராட்சி ஆணையாளர், கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் மற்றும் பதிவாளர், கல்முனை மாநகராட்சி ஆணையாளர், மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர், (ஆளணி மற்றும் பயிற்சி) கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகிய பதவிகளை அவர் இதற்கு முன்னர் வகித்திருந்தார்.

இலங்கை நிர்வாக சேவையில் 22 வருட அனுபவத்தைக் கொண்ட இவர், பொருளியல் துறையில் முதுமானிப் பட்டத்தினையும் பூர்த்தி செய்துள்ளார்.