
– யூ.எல். மப்றூக் –
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சிறப்பான நிர்வாகத்தையும், மக்கள் சேவையினையும் குழப்பும் நடவடிக்கையில்- நபரொருவர் தலைமையிலான குழுவினர் மீண்டும் ஈடுபட்டு வருவதாக, அந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்கள் சார்பான 10க்கும் மேற்பட்ட உள்ளக குழுக்களின் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டினர்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இன்று (21) ஏற்பாடு செய்யப்பட்ட, ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது, மேற்படி குழுக்களின் பிரதிநிதிகள் இந்த விடயத்தைக் கூறினார்கள்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் – தாய் சங்கத்தினர் (Mother Body) நேற்று (20) கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில்; அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நிர்வாகம் குறித்து பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாகவும், அவை அடிப்படை ஆதாரங்களற்றவை எனவும் – இன்றைய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டனர்.
“அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கொழும்பிலுள்ள தாய் சங்கத்தினருக்கும், இந்தப் பிராந்தியத்துக்கும் இணைப்பாளராக செயற்பட்டு வருகின்ற ஒரு வைத்தியர் தனிப்பட்ட விரோதம் காரணமாக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக, ஆதாரமற்ற தகவல்களை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கொழும்பிலுள்ள தாய் சங்கத்தினருக்கு வழங்கி வருகின்றார். அதனை அடிப்படையாக வைத்தே, இந்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் – பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்” எனவும், இன்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
அம்பாறை வைத்தியசாலையில் கடமையாற்றும் டொக்டர் சுஹைல் என்பவரே – இவ்வாறு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு எதிராாக – பொய்யான குற்றச்சாட்டுக்களை பரப்பி வருவதாகவும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பெண் பணியாளர் ஒருவர் குற்றஞ்சாட்டினார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நிர்வாகம் தொடர்பில் இவ்வாறான பொய்க் குற்றச்சாட்டுகளை பரப்புவதன் மூலம், உள்ளக ரீதியாக வைத்தியசாலை பாதிக்கப்படும் என்றும், நோயாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளிலும் பாதிப்புகள் ஏற்படும் எனவும், இன்றை ஊடக சந்திப்பில் பேசியவர்கள் கவலை வெளியிட்டனர்.
“இங்குள்ள வைத்தியர்களுடன் மட்டுமன்றி ஏனைய ஊழியர்களுடனும் வைத்திய அத்தியட்சகர் பிழையாக நடந்து கொள்கிறார் என்றும், அச்சுறுத்தலாக உள்ளார் என்றும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் நேற்றைய ஊடக சந்திப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், இங்கு பணியாற்றும் ஏனைய ஊழியர்களான எம்முடன் வைத்திய அத்தியட்சகர் மிகவும் கனிவுடனும், மரியாதையாகவுமே நடக்கின்றார். மேலும், தற்போதை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஜவாஹிருடைய நிர்வாகத்தின் கீழ், இந்த வைத்தியசாலையில் ஏரளமான அபிவிருத்திகள் நடந்துள்ளன” எனவும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்கள் சார்பான 10க்கும் மேற்பட்ட உள்ளக குழுக்களின் பிரதிநிதிகள் கூறினார்கள்.
இதேவேளை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நிர்வாகத்துக்கு எதிராக நாளைய தினம் (22ஆம் திகதி) நபரொருவரின் தலைமையிலான குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளதாக தமக்கு அறியக் கிடைத்துள்ளதாக இன்றைய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டோர் கூறினார்கள். “அவ்வாறு நடந்தால் – ஆர்ப்பாட்டம் செய்வோருக்கு எதிராக, வைத்திசாலை ஊழியர்களாகிய நாங்கள் போராட்டத்தில் இறங்கும் நிலை ஏற்படும்” எனவும் அவர்கள் தெரிவித்தனர்.






