
2022 மற்றும் 2025 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 4,600 க்கும் மேற்பட்ட இலங்கை சேர்ந்த சுகாதார நிபுணர்கள் (Health professionals) – நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) 78வது வருடாந்த உலக சுகாதார மாநாட்டில் (WHA78) கலந்து கொண்டு உரையாற்றும் போது, இதனைக் கூறினார்.
உலக நாடுகளின் பிரதிநிதிகள் முன் பேசிய அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ; இதில் 726 வைத்திய ஆலோசகர்கள் (consultant), 1,116 வைத்திய அதிகாரிகள் (medical officers) மற்றும் கிட்டத்தட்ட 2,800 தாதியர்கள் அடங்குவர் என்றும் குறிப்பிட்டார்.
“சொந்தமாக சுகாதார நிபுணர்களை உருவாக்குவதற்காக முதலீடு செய்த பிறகு, குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளை இலங்கை சந்தித்துள்ளது” என்றும் அவர் இதன்போது அவர் கூறினார்.
பயிற்சி பெற்ற வைத்திய பணியாளர்கள் இவ்வாறு நாட்டை விட்டுச் சென்றமை, தேசிய ரீதியிலும், உலகளாவிய ரீதியிலும் கவனத்துக்குரியது எனவும் அவர் எடுத்துரைத்தார்.
“உலகளாவிய ஆரோக்கியத்தை பாதிக்கும் – இவ்வறான சுகாதாரப் பணியாளர் இடம்பெயர்வு நிலைமையினை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை, நான் வலியுறுத்துகிறேன்” என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.



