தலைப்புச் செய்திகள்

‘உலகின் ஏழை ஜனாதிபதி’ மரணம்

உலகின் ஏழை ஜனாதிபதி என அறியப்பட்ட ‘பெப்பே’ (Pepe) என்று அழைக்கப்படும் உருகுவேயின் முன்னாள் ஜனாதிபதி ஜோஸ் முஜிகா, 89 வயதில் காலமானார்.

2010 முதல் 2015 வரை உருகுவேயை ஆட்சி செய்த முன்னாள் கெரில்லா போராளியான அவர, தனது அடக்கமான வாழ்க்கை முறையால் ‘உலகின் ஏழை ஜனாதிபதி’ என்று அறியப்பட்டார்.

இது தொடர்பில், எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள தற்போதைய ஜனாதிபதி யமண்டு ஓர்சி; “நீங்கள் எங்களுக்கு வழங்கிய அனைத்திற்கும் உங்கள் மக்கள் மீதான உங்கள் ஆழ்ந்த அன்புக்கும் நன்றி” என்று எழுதியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பெப்பே – உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

3.4 மில்லியன் மக்களை மட்டுமே கொண்ட உருகுவேயின் முன்னாள் ஜனாதிபதியின் சில மரபுகள் – சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன.

1960 களில், தாக்குதல்கள், கடத்தல்கள் மற்றும் மரண தண்டனைகளை மேற்கொண்ட ஒரு இடதுசாரி நகர்ப்புற கெரில்லா குழுவான ‘டுபமரோஸ்’ தேசிய விடுதலை இயக்கத்தை நிறுவவதற்கு இவர் உதவினார். இருப்பினும் அவர் எந்த கொலையும் செய்யவில்லை என்று எப்போதும் கூறி வந்தார்.

1970 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவததில், அவர் 06 முறை சுடப்பட்டார்.

அவர் சிறையில் இருந்து இரண்டு முறை தப்பினார். ஒரு சந்தர்ப்பத்தில் கைதிகளுடன் ஒரு சுரங்கப்பாதை வழியாக தப்பினார். உருகுவே சிறை வரலாற்றில் அது மிகப்பெரிய தப்பித்தல்களில் ஒன்றாக நம்பப்படுகிறது.

1970கள் மற்றும் 1980களில் அவர் சிறையில் கழித்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் சித்திரவதை செய்யப்பட்டார். மேலும் அந்தக் காலத்தின் பெரும்பகுதியை கடுமையான சூழ்நிலைகளிலும் தனிமையிலும் கழித்தார். 1985 இல் உருகுவே ஜனநாயகத்திற்குத் திரும்பியபோது அவர் விடுவிக்கப்பட்டார்.

சிறையில் இருந்த காலத்தில், அவர் நேரடியாக மனநலமின்மையை அனுபவித்ததாகவும், மாயைகளால் பாதிக்கப்பட்டதாகவும், எறும்புகளுடன் கூட பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.

விடுதலையான சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் பிரதிநிதிகள் சபையிலும், நாட்டின் கீழ் சபை மற்றும் மேல் சபைகளான செனட்டிலும் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

2005 ஆம் ஆண்டில், உருகுவேயின் இடதுசாரி கூட்டணியான ஃப்ரென்ட் ஆம்ப்லியோவின் முதல் அரசாங்கத்தில் அமைச்சரானார். பின்னர் 2010 இல் உருகுவேயின் ஜனாதிபதியானார். அப்போது அவருக்கு 74 வயது.

அவரது நிர்வாகத்தின் போது, ​​மிகவும் சாதகமான சர்வதேச சூழலுக்கு மத்தியில், உருகுவேயின் பொருளாதாரம் சராசரியாக ஆண்டுக்கு 5.4% என்ற விகிதத்தில் வளர்ந்தது, வறுமை குறைக்கப்பட்டது, வேலையின்மை குறைவாகவே இருந்தது.

அந்த ஆண்டுகளில் உருகுவே பாராளுமன்றம் – சமூகச் சட்டங்களான கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கியது.ஒரே பாலின திருமணத்தை அங்கீகரித்தது. மற்றும் கஞ்சா சந்தையை அரசு ஒழுங்குபடுத்தியது.

முஜிகா பதவியில் இருந்தபோது, ​​உலகெங்கிலும் உள்ள அரசுத் தலைவர்கள் வழக்கமாகச் செய்வது போல, ஜனாதிபதி இல்லத்திற்கு குடிபெயர மறுத்தார்.

அதற்கு பதிலாக, அவர் தனது மனைவியுடன் – புறநகரில் உள்ள அவர்களின் எளிமையான வீட்டில், வீட்டு உதவி மற்றும் சிறிய பாதுகாப்பு இல்லாமல் இருந்தார்.

அவர் எப்போதும் சாதாரணமாக உடை அணிந்திருந்தார். அவர் அடிக்கடி தனது வெளிர் நீல வோக்ஸ்வாகன் பீட்டில் பயணிப்பதைக் காண முடிந்தது. அவரது சம்பளத்தில் பெரும் பகுதியைக் நன்கொடையாக கொடுத்தார். இதன் காரணமாக சில ஊடகங்கள் அவரை ‘உலகின் ஏழ்மையான ஜனாதிபதி’ என்று அழைத்தன.