
கொழும்பிலுள்ள சுவிஸ் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடந்த திருட்டு தொடர்பாக, தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் பொறுப்பதிகாரியும், மற்றொரு பாதுகாப்பு அதிகாரியும் உட்பட மூன்று பேரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்தியமையை அடுத்து, அவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு தங்க நகைகள், வைரம் பதித்த மோதிரம், கைக்கடிகாரங்கள் உட்பட சுமார் 4.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் ஒரு பெட்டகத்திலிருந்து திருடப்பட்டன.
ஏப்ரல் 12 ஆம் திகதி சுவிட்சர்லாந்துக்குச் சென்று ஏப்ரல் 27 ஆம் திகதி திரும்பிய சுவிஸ் தூதுவர் அளித்த முறைப்பாட்டை அடுத்து விசாரணைகள் ஆரம்பித்தன.
தூதுவர் சென்ற பிறகு, சந்தேக நபர்கள் சட்டவிரோதமாக நகல் செய்யப்பட்ட சாவியைப் பயன்படுத்தி அவரின் பெட்டகத்தை திறந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணைகளைத் தொடர்ந்து, திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட நகல் சாவியை உருவாக்கியதாகக் கூறப்படும் பூட்டு தொழிலாளி ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
தூதுவரின் இல்லத்திலிருந்து திருடப்பட்ட பொருட்களின் ஒரு பகுதியாக நம்பப்படும் பல மோதிரங்களை, வெலிகமவில் உள்ள சந்தேகத்திற்குரிய பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரிடமிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
திருட்டு நடந்த நேரத்தில், இரண்டு பெண் வீட்டுப் பணியாளர்களும் ஒரு சமையல்காரரும் வீட்டில் இருந்துள்ளனர். அவர்கள் விசாரிக்கப்பட்டு, பின்னர் அவர்களுக்கு சம்பவத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று நிரூபிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மூன்று சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மே 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்பான செய்தி: சுவிஸ் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கம், வைரம், ரத்தினம் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு



