
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மரணமடைந்தால் கட்டாய பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு, மரண விசாரணை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.
இலங்கையில் குழந்தை இறப்பு பகுப்பாய்வின் ஒரு முக்கிய அங்கமாக இரு உள்ளது என்று, மரண விசாரணை அதிகாரிகளுக்கு – அமைச்சு அனுப்பப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதங்களுக்கான பொதுவான காரணங்களைக் கண்டறிந்து, அத்தகைய இறப்புகளைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க – இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கூறியுள்ளனர். “இந்த இறப்பு விகிதங்களைக் குறைக்க இந்த இறப்புகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களை ஆய்வு செய்து, பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னரே, பிரேத பரிசோதனை முடிவுகள் பயன்படுத்தப்படும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.
தாய் இறப்பு விகிதங்கள் குறைவாக இருந்ததன் சமீபத்திய வெற்றியைத் தொடர்ந்து, இலங்கையின் சுகாதார குறிகாட்டிகளை மேம்படுத்த – அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியாக இந்த நடவடிக்கை இருப்பதாக மற்றொரு வட்டாரம் தெரிவித்துள்ளது.
தற்போது, ஒரு குழந்தையின் மரணம் சந்தேகத்திற்குரிய தீங்கு, சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் அல்லது விபத்துகளை உள்ளடக்கியதாக இருக்கும்போது மட்டுமே, பிரேத பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இருப்பினும், இனிவரும் காலங்களில் – குழந்தையின் இறப்புக்கான காரணத்தை வைத்தியர்கள் உறுதிப்படுத்தினாலும் கூட, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க வைத்திய நிபுணர்கள் இந்தக் கொள்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர். மரணம் சந்தேகத்திற்குரியதாக இல்லாதபோது பிரேத பரிசோதனை எப்போதும் தேவையில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். ஒவ்வொரு பிரேத பரிசோதனைக்கும் சுமார் 15,000 ரூபாய் செலவாகும் என்றும், இது கணிசமான வளங்களை வீணாக்குகிறது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
“இது போன்ற கடுமையான தீர்மானங்களை எடுப்பதற்கு முன்பு, இந்த செயல்முறையின் ஒவ்வொரு படிமுறையிலும் உள்ளவர்களும் அமைச்சு கலந்தாலோசிக்க வேண்டும். எந்த தொழில்நுட்ப உள்ளீடும் இல்லாமல் சுற்றறிக்கைகள் மூலம் உத்தரவுகளை பிறப்பிப்பது முறையல்ல” என்றும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.



