
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கான அமைப்பாளர் பதவிலிருந்தும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் ஏ.கே. அமீர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன் தெரிவித்துள்ளார்.
இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துபோட்டியிடும் நிலையில், கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்த ஏ.கே. அமீர் – கட்சியின் தீர்மானத்தை மீறி, சுயேற்சைக்குழுவொன்றின் வேட்பாளராக வேட்புமனுவை தாக்கல் செய்தமையின் காரணமாக, அவர் அமைப்பாளர் பதவியிலிருந்தும் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார் எனவும் செயலாளர் நாயகம் சுபைர்தீன் கூறினார்.
மேலும், அவருக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் விரைவில் நடைபெறும் எனவும் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன் மேலும் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, மேற்படி அமைப்பாளர் பதவியை வகித்த அமீர், சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்கா தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



