
– முன்ஸிப் அமஹட் –
முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எல். அதாஉல்லா, அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
தேசிய காங்கிரஸ் சார்பாக அவர் இம்முறை போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு அதாஉல்லா தெரிவு செய்யப்பட்டிருந்த போதிலும், தற்போதுள்ள நாடாளுமன்றத்துக்காக கடந்த வருடம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அதாஉல்லா தோல்வியடைந்தார்.
இந்த நிலையிலேயே தனது சொந்த ஊரில் அமைந்துள்ள – அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் அதாஉல்லா போட்டியிடுகின்றார்.
இது தொடர்பில் அம்பாறை மாவட்டக் கச்சேரியில் வைத்து – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அந்தக் கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளருமான ஏ.எல். தவம் – ஊடகவியலாளர்களிடம் இன்று பேசுகையில்; “கட்சியைக் காப்பாற்றுவதற்கு வேறு வழிகளில்லாத நிலையில், அதாஉல்லா இவ்வாறு – அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுகிறார்” என்றார்.
அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் இதற்கு முன்னர் அதாஉல்லாவின் மகன் அஹமட் சக்கி மேயராக இருந்து வந்தார்.
முஸ்லிம் அரசியல் கட்சியொன்றின் தலைவர் – இலங்கை வரலாற்றில் உள்ளூராட்சித் தேர்தலொன்றில் போட்டியிடுகின்றமை இதுவே முதல் தடயாகும்.



