தலைப்புச் செய்திகள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ரணில் நிராகரிப்பு: ஏப்ரல் 10இல் நாடாளுமன்றில் விவாதம்

ட்டலந்த பகுதியில் இளைஞர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்திய ஆணைக்குழுவின் அறிக்கையை, தான் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (16) தெரிவித்தார்.

1987/89 ஜே.வி.பி கிளர்ச்சியின் உச்சக்கட்டத்தில் – பியகமவில் உள்ள முக்கியமான அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு பாதுகாப்பை வழங்கிய பாதுகாப்புப் படையினருக்கு, தங்குமிடம் வழங்குமாறு அப்போதைய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன விடுத்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான எனது நடவடிக்கை குறித்து மட்டுமே ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது – என்று ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள ஒரு விசெட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க பட்டலந்தவில் அமைந்திருந்த சட்டவிரோத தடுப்பு முகாம் மற்றும் அதன் செயல்பாடுகளை ஆராய்ந்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதம், ஏப்ரல் 10ஆம் திகதியன்று நடைபெறும் என, நாடாளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நேற்று (15) நாடாளுமன்றத்தில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மே மாதத்தில் விவாதத்திற்கு மற்றொரு திகதியை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை அவைத் தலைவர் பிமல் ரத்னாயக்க வெள்ளிக்கிழமை, மார்ச் 14 அன்று சபையில் சமர்ப்பித்தார்.