தலைப்புச் செய்திகள்

அனுராதபுரத்தில் பெண் வைத்தியரை வன்புணர்ந்தவர், ராணுவத்திலிருந்து தப்பியோடியவர்: அமைச்சர் தெரிவிப்பு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் நேற்று (10) இரவு பெண் வைத்தியரை வன்புணர்ந்ததாக (Rape) கூறப்படும் சந்தேக நபர் – அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்றைய (11) நாடாளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய அமைச்சர்; சந்தேக நபர் ராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்றும், அவரைக் கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதனிடையே, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் நேற்று இரவு பெண் வைத்தியரை வன்புணர்ந்ததாகக் கூறப்படும் நபரை உடனடியாகக் கைது செய்யக் கோரி, வைத்தியர்கள் இன்று (11) காலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

குறித்த 32 வயதுடைய பெண் வைத்தியர், நேற்று (10) தனது கடமைகளை முடித்துவிட்டு, அரசு வழங்கிய வைத்திய அதிகாரிகளுக்கான விடுதியில் உள்ள தனது இருப்பிடத்துக்குத் திரும்பியிருந்தார்.

இதன்போது மாலை 6.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை, அடையாளம் தெரியாத ஒருவர் வளாகத்திற்குள் நுழைந்து, கத்தியைக் காட்டி மிரட்டி, குறித்த வைத்தியரை வன்புணர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.