தலைப்புச் செய்திகள்

பொதுமக்களை தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகள் அச்சுறுத்துவதாக, நாமல் எம்.பி கவலை

தேசிய மக்கள் சக்தியினர் பொதுமக்களை பல்வேறு பகுதிகளிலும் அச்சுறுத்துகின்றமை தொடர்பில், பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (17) சபையில் கவலை தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஷ; மாத்தளையைச் சேர்ந்த ஒருவரை – தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் அச்சுறுத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருவதாக கூறினார்.

அக்குரெஸ்ஸ மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸவிலும் இதேபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

அரசாங்க பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் நபர்கள், அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் மக்களை அச்சுறுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஷ கூறினார்.

மக்களை ஒடுக்குவதையும் ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதையும் அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என்றும், தேசிய மக்கள் சக்தியின் கிராமப்புற பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.