தலைப்புச் செய்திகள்

முன்னைய அரசாங்கத்தினுடைய தொடர்ச்சி: வரவு – செலவுத் திட்டம் குறித்து ஹர்ஷ எம்.பி கருத்து

2025ஆம் ஆண்டுக்குரிய வரவு – செலவுத் திட்ட உரை, முந்தைய அரசாங்கத்தினுடைய பொருளாதாரத் திட்டத்தின் தொடர்ச்சி என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இந்தத் திட்டம் தவறு என்று தான் கூறவில்லை. என்றாலும், அரசாங்கத்தின் சித்தாந்த நிலைப்பாடு குறித்து அது கடுமையான கவலைகளை எழுப்புகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி சில்வா கூறினார்.

“ஜேவிபி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சிகள் பதிலளிக்க வேண்டிய கருத்தியல் கேள்விகள் இருக்கும். இங்கு விவாதிக்கப்பட்டது ஒரு புதிய தாராளவாத திட்டம். அவர்கள் 40 ஆண்டுகளாக இதுபோன்ற கொள்கைகளை எதிர்த்தாலும், இப்போது அவற்றை ஏற்றுக்கொண்டாலும், அவர்களின் கடந்தகால எதிர்ப்பின் நோக்கம் என்ன?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“இந்த வரவு – செலவுத் திட்டத்துக்கும், முந்தைய வரவு – செலவுத் திட்டத்துக்கும் இடையே எந்த வித்தியாசத்தையும் நாங்கள் காணவில்லை” என்று ஹர்ஷ டி சில்வா கூறினார்.

“அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு ஒரு ஹோல்டிங் நிறுவனம் நிறுவுவதை அல்லது எரிபொருள் மற்றும் மின்சார விலை நிர்ணய சூத்திரங்களை தற்போதைய ஆட்சியாளர் இப்போது ஆதரிக்கின்றனர். ஆனால் ஏன் முன்பு அவற்றை எதிர்த்தார்கள் என்று நாம் கேட்க வேண்டும்?”. அவர்களின் எதிர்ப்பு இல்லையென்றால், நாடு முன்னரே முன்னேறியிருக்க முடியும் என்றும் ஹர்ஷ கூறினார்.

“ஆனால் அவர்கள் இப்போது ஒரு சமூக சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்டால், நாங்கள் அதை வரவேற்கிறோம். அதை ஒரு வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம்” எனவும் தெரிவித்தார்.