
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக – மேலும் மூன்று பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது.
இஸ்ரேலியபணயக் கைதிகள் – ஓஹத் பென் அமி (56 வயது), எலி ஷராபி (52 வயது), மற்றும் ஓர் லெவி (34 வயது) ஆகியோர் – காசாவில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது ஐந்தாவது கைதிகள் பரிமாற்றமாகும். இந்த மூவருக்கும் பகரமாக 183 பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 183 பலஸ்தீன கைதிகளில் ஒக்டோபர் 7 ஆம் திகதிக்குப் பிறகு கைது செய்யப்பட்ட 111 பேர் காஸாவில் விடுவிக்கப்படுவார்கள்.
ஆயுட்கால தண்டனை விதிக்கப்பட்ட ஏழு கைதிகள் நாடு கடத்தப்படுவார்கள்.
காசாவைச் சேர்ந்த நீண்ட கால தண்டனை விதிக்கப்பட்ட 20 கைதிகள் அங்கு விடுவிக்கப்படுவார்கள்.
மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 42 கைதிகளும், ஜெருசலேமில் மூன்று கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள்.
இது இவ்வாறிருக்க மனிதாபிமான உதவி மற்றும் பிற முக்கிய பொருட்கள் காஸாவுக்குள் நுழைவதைத் தடுப்பதன் மூலம் – இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதட்டமான தாமதத்தைத் தொடர்ந்து கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.



