
நாடு முழுவதுமுள்ள 10,096 பாடசாலைகளில் – மொத்தமாக 300 மாணவர்களை விடவும் குறைந்த மாணவர்கள் கல்வி பயில்கின்ற 6,576 பாடசாலைகளிலுள்ள, அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெற்றுக்கொள்ளாத குடும்பங்களிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும், பாடசாலை பயிற்சிப் புத்தகங்களைப் பெற்றுக் கொள்வதற்காக, 06 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
மேலும் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களிலிருந்து பாடசாலைக்குச் செல்கின்ற அனைத்து மாணவர்களுக்கும், மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற பௌத்த துறவற மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
குறித்த கொடுப்பனவை ‘வவுச்சர்’ ஒன்றின் மூலம் வழங்குவதற்கு – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் எனும் வகையில் பிரதமர் ஹரினி அமரசூரிய சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஏற்னவே, அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெறுகின்ற குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கு பாடசாலை பயிற்சிப் புத்தகங்களை வாங்குவதற்காக 6,000/- ரூபா கொடுப்பனவு – தற்போது அக்குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெற்றுக் கொள்ளாத குடும்பங்களில் பெற்றோர்களை இழந்த மாணவர்கள், தாய் அல்லது தந்தை இயலாமைக்குட்பட்டுள்ள குடும்பங்களிலுள்ள மாணவர்கள், சிறுவர் இல்லங்களிலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்கள், விசேட காரணங்களால் ஆதரவற்ற நிலைமைக்குள்ளாகியுள்ள மாணவர்களுக்கு குறித்த கொடுப்பனவை வழங்குவதற்கான பொறுப்பு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.



