
வெளிநாட்டில் வேலைபெற்று இலங்கையிலிருந்து 2024ஆம் ஆண்டில் மொத்தம் 312,836 சென்றுள்ளனர் என, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர், 2020ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து அதிகளவானோர் வேலைவாய்ப்புப் பெற்று வெளிநாடு சென்றிருந்தனர். ஆனால், 2024ஆம் ஆண்டின் தொகை, முன்னைய தொகையை விஞ்சியுள்ளது.
2024 ஆம் ஆண்டில், 185,162 ஆண் தொழிலாளர்களும், 127,674 பெண் தொழிலாளர்களும் வேலைக்காக வெளிநாடு சென்றனர். அந்த வகையில், அதிகளவில் குவைத் நாட்டுக்கு 77,546 பேர் சென்றுள்ளனர். அதனையடுத்து 51,550 தொழிலாளர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ளனர்.
தென் கொரியா, இஸ்ரேல் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் வேலை தேடும் இலங்கையர்களின் போக்கு அதிகரித்து வருவதை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன.
2024 ஆம் ஆண்டில், 7,098 இலங்கையர்கள் தென் கொரியாவிற்கும், 9,665 பேர் இஸ்ரேலுக்கும், 8,665 பேர் ஜப்பானுக்கும் வேலைக்காகச் சென்றுள்ளனர்.
இதற்கமைய நொவம்பர் 2024 இறுதிக்குள் இலங்கைக்கு 6,462 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை மதிப்பில் 188889 கோடி ரூபாய்) வெளிநாட்டு பணியாளர்களிடமிருந்து வருமானமாக கிடைத்துள்ளது.



