
இஸ்லாமிய சட்டப்படி செயல்படுவதாக கூறி நடத்தப்பட்ட பிரிவெல்த் குளோபல் (Privelth Global) என்ற நிதி நிறுவனத்தின் மூலம், பொதுமக்களின் சுமார் 150 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து விட்டு இந்தியாவுக்குத் தப்டியோடிய தம்பதியினர் இலங்கை விமான நிலையத்தில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் முகமது ஷிஹாப் – பாத்திமா பர்சானா எனும் தம்பதியினர் – அவர்களின் 13 வயது மகனுடன் கைதாகினர்.
கல்முனையில் உள்ள பிரிவெல்த் குளோபல் நிறுவனத்தின் கிளையில் மேற்படி நிதி மோசடி நடந்துள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளராக முகமது ஷிஹாப் செயற்பட்டு வந்துள்ளார். அதன் பணிப்பாளராக அவரின் மனைவி இருந்துள்ளார்.
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகில் இந்தியாவுக்கு 2020ஆம் ஆண்டு இவர்கள் தப்பிச் சென்றனர். இதனையடுத்து நாகப்பட்டினம் – வேதாரண்யத்தில் 2020ஆம் ஆண்டு நொவம்பர் 06ஆம் திகதி இரவு சுமார் 11 மணியளவில் – இவர்கள் அங்கு கைதாகினர்.
இதனையடுத்து இந்ததத் தம்பதியினர் புழல் சிறையில் அடைக்கப்பட்டதோடு, பின்னர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தனித்தனியாக அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில்தான், இலங்கையில் அந்தத் தம்பதிக்கு எதிராக நிதி மோசடி முறைப்பாடு இருப்பதால், அவர்களை தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஆனால், இவர்கள் தங்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என்றும், அங்கு தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனவும் கோரிக்கை விடுத்திருந்த போதும், அதனையும் மீறியே இவர்கள் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
மேற்படி தம்பதியினரை இந்தியாவிலிருந்து அனுப்புமாறு கோரி இலங்கை அரசு கோரியதாகவும், இவர்களுக்கான கடவுசீட்டு மற்றும் விமானப் பயணச் சீட்டு ஆகியவற்றை இலங்கை தூதரகம் அனுப்பியதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



