தலைப்புச் செய்திகள்

சங்கமன்கண்டி கடலில் மூழ்கிய தந்தை, மகன், மருமகன் சடலங்களாக மீட்பு

– பாறுக் ஷிஹான் –

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி கடலில் மூழ்கி காணாமல் போன தந்தை, மகன் மற்றும் மருமகன், மூன்று பேரின் சடலங்களும் நேற்று வியாழக்கிழமை (26) மாலை விநாயகபுரம் மங்கமாரி கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சங்கமன்கண்டியைச் சேர்ந்த 38 வயதுடைய மயில்வாகனம் நந்தராஜ், நந்தராஜின் 15 வயதுடைய மகன் மற்றும் நந்தராஜின் சகோதரியின் மகனான 17 வயதுடைய மருமகன் ஆகிய மூவருமே சடலமாக மீட்கப்பட்டனர்.

மேற்படி மூவரும் சம்பவ தினமான புதன்கிழமை (25) மாலை சங்கமன்கண்டி கடலுக்கு நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது நந்தராஜின் மகனும் மருமகனும் கடல் அலைகளில் இழுத்துச் செல்லப்பட்டதையடுத்து – நந்தராஜ் அவர்களைக் காப்பாற்றுவதற்காகக் கடலில் குதித்த போது அவரும் கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து காணாமல் போனவர்களைக் கடற்படை மற்றும் பொலிஸாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், வியாயகபுரம் மங்கமாரி கடற்கரை பகுதியில் நேற்று காலையில் முதலில் 17 வயது சிறுவனின் சடலம் கரை ஒதுங்கியது.

இதனையடுத்து சிலமணி நேரத்தின் பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக ஏனைய இரு சடலங்களும் கரையொதுங்கின.

அதனையடுத்து சடலங்கள் மீட்கப்பட்டு – திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.