
கொவிட் 19 தொற்றுநோய் நிலவிய காலத்தில் – தேசிய மருத்துவ ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்படாத ஒரு நிறுவனத்தால் பிசிஆர் (PCR) மற்றும் விரைவான அன்டிஜன் சோதனைக் கருவிகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று (18) தெரிவிக்கப்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் சபையில் எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தேசிய மருத்துவ ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்படாத திவச பார்மா (Divasa Pharma) எனும் நிறுவனத்தில், 2200 மில்லியன் ரூபா பெறுமதியான பிசிஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனை கருவிகளை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
“திவச பார்மா ((Divasa Pharma) என்பது மற்றொரு பெரிய நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனமாகும் என – தொற்றுநோய் காலத்தில் செய்திகளில் முன்னிலைப்படுத்தப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி, விரைவில் நாடாளுமன்றத்தில் விவரம் தெரிவிப்போம்” என, அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, மொத்தம் 644 கோடியே 22 லட்சத்து 11 ஆயிரத்து 627 ரூபாயை, பிசிஆர் மற்றும் அன்டிஜன் உபகரணங்களுக்காக அரசு செலவிட்டுள்ளது தெரியவந்தது.
மேலும், 21 லட்சத்து 97 ஆயிரத்து 318 அன்டிஜன் சோதனைகளும், 40 லட்சத்து 41 ஆயிரத்து 124 பிசிஆர் சோதனைகளும் அரசு மேற்கொண்டதாகவும், தனியார் துறையால் 618,538 அன்டிஜன் சோதனைகளும், 26 லட்சத்து 41 ஆயிரத்து 326 பிசிஆர் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த சோதனைகள் அனைத்தும் 2019 முதல் 2022 வரை மேற்கொள்ளப்பட்டன.



