தலைப்புச் செய்திகள்

மேலும் இரண்டு போலி கலாநிதிகள்: சபாநாயகரைத் தொடர்ந்து, இரண்டு அமைச்சர்களின் பெயரின் முன்னால் இருந்த ‘டொக்டர்’ எனும் சொல் நீக்கம்

சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வலவின் கலாநிதிப் பட்டம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், நாடாளுமன்ற இணையத்தளத்தில் அவரின் பெயருக்கு முன்பாகவிருந்த கலாநிதி (Dr) எனும் சொல் நீக்கப்பட்டுள்ள நிலையில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அருண கருணாதிலகவும் ‘கலாநிதி’ என குறிப்பிடப்பிட்டு வந்த நிலையில், அவ்வாறான தகுதிகள் அவருக்கு இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னாள் இருந்த கலாநிதி எனும் சொல்லும் நாடாளுமன்ற இணையத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கருணாதிலக்க கல்வித்துறையைச் சேர்ந்தவர் என்பதால், அவரின் நெருங்கிய உதவியாளர்கள் சிலர் – அவரை ‘டொக்டர்’ என்று தவறாக கூறி வந்துள்ளதாக டெய்லி மிரர் குறிப்பிட்டுள்ளது.

அமைச்சர் கருணாதிலக்க தற்போது களனிப் பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டுக் கணிதத்தில் கலாநிதிப் பட்டத்திற்காக படித்து வருகிறார்.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் அவர் தனது ஆய்வறிக்கையை சமர்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், முன்னதாக சபைத் தலைவர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ கடிதங்களில் நீதி அமைச்சர் ‘டொக்டர்’ என்ற பட்டத்துடன் குறிப்பிடப்பட்டிருந்தார், ஆனால் அந்தச் சொல் தற்போது நாடாளுமன்ற இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தேசிய மக்கள் சக்தி சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட கல்வியாளர்கள், பொதுமக்களை ஏமாற்றுவதற்காக இவ்வாறான போலியான தலைப்புகளைப் பயன்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

முன்னதாக, சபாநாயகர் போலியான கலாநிதி பட்டத்தை பயன்படுத்தியமை தெற்காசியாவின் பழமையான ஜனநாயக நாடான இலங்கை நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என – ஐ.தே.க. விமர்சனங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, சபாநாயகர் தனது பெயரின் முன்னாள் இருந்த கலாநிதி எனும் பதத்தை நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளார்.

அவர் விரைவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.