
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல, கலாநிதி பட்டம் பெற்றுள்ளதாக பொய்யாகக் கூறி – பொதுமக்களையும் அரசாங்கத்தையும் தவறாக வழிநடத்தியதாகக் குற்றம் சுமத்தி, அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) கையெழுத்திடத் தொடங்கியது.
சபாநாயகர் பல்வேறு கட்டங்களில் – தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு, 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாடாமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், சபாநாயகராகப் பதவியேற்ற பிறகும், தான் பல்கலைக்கழகத்தில் ரசாயன பொறியியலில் பிஎஸ்சி பட்டம் பெற்றதாகவும், மொரட்டுவ மற்றும் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றதாகம் தெரிவித்துள்ளார் என, ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
மேலும், ‘டொக்டர்’ என்ற பட்டத்தை அவர் பயன்படுத்தியதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் அவரின் கலாநிதிப் பட்டம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கேள்விகள் தொடர்பில், அவர் அமைதியாக இருந்து உண்மையை மறைத்ததாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரேரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சபாநாயகர் இந்த நெறிமுறை தரநிலைகளை மீறியதாக குற்றம் சாட்டி, குறிப்பாக 3.6 மற்றும் 5 பிரிவுகள், நாடாளுமன்ற நடத்தை விதிகளை மீறுவதாக இந்த பிரேரணை குறிப்பிடுகிறது.
மேலும், நாடாளுமன்றம், அரசியலமைப்பு மற்றும் அவரது தலைமையின் கீழ் உள்ள பிற முக்கிய அரசு நிறுவனங்களின் மீதான பொது நம்பிக்கையை அவர் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் நமபிக்கையில்லா பிரேரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேற்படி நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, எதிர்க்கட்சி பிரதம கொறடா கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜே.சி அலவத்துவல, அஜித் பீ பெரேரா, சுஜித் சஞ்சய பெரேரா, சத்துர கலப்பத்தி, ஜகத் விதான மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.



