
தனது கல்வித் தகுதி குறித்து தான் எந்தவிதமான தவறான கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று, சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதவியை ராஜிநாமா செய்வதாகத் தெரிவித்து இன்றைய தினம் (13) வெளியிட்டுள்ள ஊடக அறிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; கடந்த சில நாட்களாக எனது கல்வித் தகுதி குறித்த பிரச்சனை சமூகத்தில் எழுந்துள்ளது. எனது கல்வித் தகுதி குறித்து நான் எந்தவிதமான தவறான கருத்தையும் தெரிவிக்கவில்லை
ஆனால், தற்போது கல்வித் தகுதியை உறுதிப்படுத்த தேவையான சில ஆவணங்கள் என்னிடம் இல்லாததாலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து பெற வேண்டியதாலும், அந்த ஆவணங்களை உடனடியாக சமர்பிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனக்கு கலாநிதி பட்டம் வழங்கிய ஜப்பானில் உள்ள வசேடா (Waseda) பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து, தொடர்புடைய கல்வி ஆவணங்களை சமர்ப்பிக்கும் திறன் என்னிடம் உள்ளது. அவற்றை விரைவில் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
இருந்தபோதிலும், தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் மற்றும் எம்மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு அவமானம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக – நான் தற்போது வகிக்கும் சபாநாயகர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்பான செய்தி: சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: ஐக்கிய மக்கள் சக்தி கையெழுத்திட்டது



