தலைப்புச் செய்திகள்

ஐஸ் போதைப் பொருள் வியாபாரி, இரண்டாவது தடவையாகவும் கல்முனையில் கைது

– பாறுக் ஷிஹான் –

பாடசாலை மாணவர்கள் உட்பட இளைஞர்களை இலக்கு வைத்து ஐஸ் போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த சந்தேக நபரை – இரண்டாவது தடவையாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு இன்று (20 ) அதிகாலை கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமாக நடமாடிய குறித்த சந்தேக நபரை 01 கிராம் 60 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் அதிரடிப்படையினர் கைது செய்தனர்.

குறித்த சந்தேக நபர் முன்னரும் ஐஸ் போதைப்பொருளுடன் மற்றுமொருவருடன் கைது செய்யப்பட்டிருந்தார். கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் வைத்து, கல்முனை விசேட அதிரடிப் படையினர் அவரைக் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைதான சந்தேக நபர் – கல்முனை குடி மதிரிஸா வீதியை வசிப்பிடமாக கொண்ட இரண்டு பிள்ளையின் தந்தை என்றும், கடந்த நொவம்பர் மாதம் (11) ஆந் திகதி ஐஸ் போதைப் பொருளுடன் – கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தவர் என விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபரை இன்று கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த கல்முனை விசேட அதிரடிப்படையினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.