தலைப்புச் செய்திகள்

“இதை மட்டும் செய்து விடாதீர்கள்”: பார்வையற்ற முதல் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த டி சில்வா எச்சரிக்கை

தினொரு வயதில் கிறிக்கட் விளையாடியபோது தனது கண்ணில் ஏற்பட்ட காயத்தை குடும்பத்தாரிடம் சொல்லாமல் மறைத்தமைதான், இறுதியில் தனக்கு பார்வை இழப்பு ஏற்படக் காரணமாயிற்று என, இலங்கையின் முதல் பார்வையற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

கண்ணில் ஏதேனும் காயம் ஏற்பட்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறும் பொதுமக்களை அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா – தனது கண்ணில் ஏற்பட்ட காயத்தின் பின்னணியில் உள்ள கதையை, பொதுமக்களுக்கு ஒரு பாடமாக விவரித்துள்ளார். கிரிக்கெட் பந்து கண்ணில் தாக்கியதில் தனது ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

“நான் செய்த தவறு என்னவென்றால் எனது கண்ணில் ஏற்பட்ட காயத்தை மறைத்து, அந்த நேரத்தில் அதை என் குடும்பத்தாரிடம் தெரிவிக்கத் தவறியது. இதனால் எனக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டது. எனவே, கண்ணில் தூசி படிந்தாலும் உடனடியாக கண் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்பதே பொதுமக்களுக்கு எனது அறிவுரை”என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பார்வைக் குறைபாடுள்ள நபரின் வாழ்க்கை மிகவும் கடினமானது என்றும், இதுபோன்ற கண் காயங்களைப் புறக்கணித்தால், அவற்றிலிருந்து மீள முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.