
லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட – ராகம பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் பெண் அதிபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலாம் தரத்துக்கு தனது பிள்ளையை அனுமதித்தமைக்காக பெற்றோரிடமிருந்து 150,000 ரூபா பணம் பெறுவதற்கு முயற்சித்த போது, அவர் கைது செய்யப்பட்டார்.
மேற்படி அதிபர் இன்று (08) கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
ராகம – மட்டுமகல பிரதேசத்தில் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து, லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று (07) மாலை – அதிபரைக் கைது செய்திருந்தனர்.
தரம் 01 வகுப்புக்கு முறைப்பாட்டாளரின் பிள்ளையை அனுமதிப்பதற்கு குறித்த பெண் அதிபர் லஞ்சம் கோரியுள்ளார்.
பாடசாலை வளாகத்தில் உள்ள அதிபரின் அலுவலகத்தில் மாலை 4.00 மணியளவில் லஞ்சம் வாங்கும் போதே அவர் கைது செய்யப்பட்டார்.



