
– பாறுக் ஷிஹான் –
சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட மாதிரி வாக்குச்சீட்டுக்கள் – அரசியல் கட்சி ஒன்றின் அலுவலகத்துக்கு வாகனம் ஒன்றில் எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
கல்முனை காசிம் வீதி பகுதியில், அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கட்சி ஒன்றின் அலுவலகத்துக்கு இந்த சட்டவிரோத மாதிரி வாக்குச்சீட்டுக்கள் எடுத்து செல்லப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் ரகசிய தகவல் ஒன்றினை அடுத்து, குறித்த அலுவலகத்துக்கு அருகில் தேடுதல் மேற்கொண்ட போது, பொதி செய்யப்பட்ட சுமார் 32 ஆயிரம் வாக்கு சீட்டுக்களுடன் இரு சந்தேக நபர்களை நேற்று (7) மாலை கைது செய்திருந்தனர்.
கைப்பற்றப்பட்ட மாதிரி வாக்கு சீட்டில் ஒரு முஸ்லிம் தேசிய கட்சி ஒன்றின் சின்னத்துக்கும் இலக்கம் இரண்டிற்கும் புள்ளடி இடப்பட்டிருந்தது.
தற்போது கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், மீட்கப்பட்ட சட்டவிரோதமான வாக்குச்சீட்டுக்கள் யாவும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்க கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸாரும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



