
முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் தனது தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட ஆளணிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு – பொது பாதுகாப்பு அமைச்சு அண்மையில் எடுத்த தீர்மானம் தொடர்பில், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், புதிய தீர்மானத்தின் பிரகாரம் 50 ஆக இருந்த தனது பாதுகாப்பு 30 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளில் தனக்கு மிக உயர்ந்த அச்சுறுத்தல் இருப்பதை, அவர் வசிக்கும் பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியின் கடிதம் சுட்டிக்காட்டுவதாகவும், தனது பாதுகாப்பு விவரங்களுக்கு குறைந்தபட்சம் 50 பணியாளர்கள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளில், மகிந்த ராஜபக்சவுக்கு 243 பொலிஸ் மற்றும் ராணுவ அதிகாரிகளும், மைத்திரிபால சிறிசேனவுக்கு 109 பொலிஸ் உத்தியோகத்தர்களும், கோட்டாபய ராஜபக்சவுக்கு 200 பொலிஸ் மற்றும் ராணுவத்தினரும் கொண்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனக்கு கடுமையான அச்சுறுத்தல்கள் இருகக்கும் நிலையில், 1988இல் தனது கணவரைப் போலவே, தன்னையும் படுகொலை செய்யும் திட்டம் உள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பி, தனது பாதுகாப்பை மட்டும் குறைப்பதற்கான முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.



