முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயின் மனைவிக்கு விளக்க மறியல்

🕔 November 4, 2024

முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி சஷி பிரபா ரத்வத்த, கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடைய நுகேகொட – மிரிஹான பகுதியிலுள்ள வீட்டில், பதிவு செய்யப்படாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், நீதிமன்ற உத்தரவுக்கமைய நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, அவரை நொவம்பர் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் உத்தரவிட்டார்.

நுகேகொட – மிரிஹான பகுதியில் உள்ள லொஹான் ரத்வத்தவினுடைய மனைவியின் வீட்டில் – பதிவு செய்யப்படாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, ஒக்டோபர் 31ஆம் திகதி கண்டி, கட்டுகஸ்தோட்டையில் வைத்து மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பதிவு செய்யப்பட்ட இலக்கத் தகடு இல்லாத கார் ஒக்டோபர் 26, 2024 அன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார்.

மிரிஹான, எம்புல்தெனிய பிரதேசத்திலுள்ள மூன்று மாடி வீடொன்றில், இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, குறித்த சொகுசு காரை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

விசாரணையின் போது, ​​லொஹான் ரத்வத்த மற்றும் அவரின் மனைவி இருவரும், குறித்த வீட்டில் தனது மாமியார் வசிப்பதாக பொலிஸாரிடம் விளக்கமளித்துள்ளனர். கண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளரினால் மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்த கார் அங்கு கொண்டு வரப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த, நொவம்பர் 02ஆம் திகதி சிகிச்சைக்காக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது கொழும்பு பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்