தலைப்புச் செய்திகள்

வெளிநாட்டு வேலை மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 09 மாதங்களில் 105 மில்லியன் ரூபாய் இழப்பீடு

வெளிநாட்டு வேலை மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 105.6 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலை மோசடிகளில் ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் பதிவு செய்யப்படாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதைத் தொடர்ந்து – இந்த இழப்பீடு வழங்கப்பட்டதாக கூறியுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி செய்பவர்களுக்கு எதிராக ஜனவரி முதல் செப்டம்பர் வரை 570 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும், அதே நேரத்தில் பெறப்பட்ட 3,351 புகார்களில் 1,177 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளன எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவு நடத்திய 19 சோதனைகளில், 17 உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட 104 நபர்களை கைது செய்யப்பட்டனர்.

இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், ருமேனியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்புகள் வழங்குவதாக கூறப்படும் மோசடி தொடர்பில் – விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு பணத்தை வழங்குவதற்கு முன்னர், விவரங்களை சரிபார்க்குமாறு – பொதுமக்களை வலியுறுத்தும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வெளிநாட்டு வேலை மோசடிகள் தொடர்பாக பணியகத்தின்1989 தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது.