தலைப்புச் செய்திகள்

நீதிமன்றில் சரணடைந்த முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுக்கு எச்சரிக்கையுடன் பிணை

– அஹமட் –

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த தேசிய காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, இன்று (24) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் சரணடைந்தமையை அடுத்து, நீதவானின் கடுமையான எச்சரிக்கையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்றில் தேர்தல் சட்டங்களை மீறி, கடந்த 17ஆம் திகதி – அதாஉல்லாவும் அவரின் ஆதரவாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, அவரை பொலிஸார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் அதாஉல்லா சரணடைந்தார்.

இதனையடுத்து அதாஉல்லாவை கடுமையாக எச்சரித்த நீதவான், அவரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, தேர்தல் சட்டத்தை மீறி அதாஉல்லாவுடன் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட்ட – அவரின் ஆதரவாளர்களை தாம் தேடி வருவதாக, அக்ரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.