தலைப்புச் செய்திகள்

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் 21 ஆயிரத்துக்கும் மேல் நிராகரிப்பு

பொதுத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்புக்கான மொத்த விண்ணப்பங்களில் 21,160 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 759,210 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறியுள்ளார்.

“தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளது. சமர்ப்பிக்கப்பட்ட 759,210 விண்ணப்பங்களில் 738,050 ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. சமீபத்திய ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் 25,731 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இம்மாதம் 23ஆம் திகதி தபால் மூல வாக்காளர் அட்டைகள் வழங்கப்படும். அதேபோல், உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் இம்மாதம் 26ஆம் திகதி வெளியிடப்பட உள்ளன.

நாளைய தினம் கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வேட்பாளர்களுக்கான வானொலி நேரத்தை ஒதுக்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வு குறித்து அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது” எனவும்அவர் தெரிவித்தார்.