தலைப்புச் செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டி அறிந்திருந்த ரவி செனவிரட்னவை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமித்துள்ளமை பெரும் தவறு: உதய கம்மன்பில

ஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அது நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் வெளியிடப்படாத இரண்டு விசாரணைகள் தொடர்பான உண்மைகளை முன்வைக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை இன்று (21) நடத்திய போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

அப்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) தலைவராக இருந்த ரவி செனவிரத்னவுக்கு இந்தத் தாக்குதல்கள் குறித்து அறிவிக்கப்பட்டதாக விசாரணை அறிக்கைகள் குறிப்பிடுகின்றன என்றார்.

சமீபத்திய ஜனாதிபதித் தேர்தலுக்கு அண்மித்த காலப்பகுதியில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைகள் குறித்து அவர் பேசினார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக சனல்-4 தொலைக்காட்சியில் கூறப்பட்ட 25 குற்றச்சாட்டுகள் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ. இமாம் தலைமையிலான குழு ஆராய்ந்து அறிக்கை அளித்துள்ளதாகவும், குற்றச்சாட்டுகள் உண்மையா இல்லையா என்பதைக் கண்டறிவதில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் கம்மன்பில கூறினார்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.என்.ஜே. டி அல்விஸ் தலைமையிலான குழுவின் கீழ் நடத்தப்பட்ட இரண்டாவது விசாரணை அறிக்கை. தாக்குதல்களைத் தடுப்பதில் பொலிஸ் மற்றும் அரச புலனாய்வு சேவைகள் எந்த வகையிலும் தோல்வியடைந்தனவா என்பது குறித்து கவனம் செலுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான தவ்ஹீத் ஜமாத் தீவிரவாதக் குழுவால் தேவாலயங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று, 2019 ஏப்ரல் 09 ஆம் திகதி அரச புலனாய்வுப் பிரிவின் தலைவரால் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்குத் தெரிவிக்கப்பட்டதாக – இரண்டாவது அறிக்கையின் 40 ஆவது பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளையும் தற்போதைய ஜனாதிபதி மறைக்க முற்படுவது ஏன் எனவும் கம்மன்பில கேள்வி எழுப்பினார்.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், தற்போது பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

“இந்த அறிக்கை ரவி செனவிரத்னவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது. முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும் தம்மை கைது செய்வதை தடுக்கக் கோரி உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்” என கம்மன்பில இதன்போது தெரிவித்தார்.

2019 ஏப்ரலில் ரவி செனவிரத்ன ஏப்ரல் 09 முதல் 16 வரை வெளிநாட்டில் இருந்ததாகவும் அவருக்குப் பதிலாக அதிகாரி நாகமுல்லவை நியமித்ததாகவும் அறிக்கை கூறுகிறது, ஆனால் தாக்குதல் குறித்த எச்சரிக்கை கடிதம் அதிகாரி நாகமுல்லவுக்கு தெரிவிக்கப்படவில்லை. இது எப்படி என்று கம்மன்பில கேள்வி எழுப்பினார்.

“விசாரணை செய்தபோது, ​​சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம், செனவிரத்ன இல்லாத நிலையில் அவரது பெயரில் எழுதப்பட்ட ரகசியக் கடிதங்களைத் திறக்க வேண்டாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக ஆணைக்குழுவிடம் தெரிவிக்பப்பட்டிருந்தது. அந்தவகையில், அந்தக் கடிதம் ரவி செனவிரத்னவின் மேசையில் ஏறக்குறைய 12 நாட்களாக இருந்தது” என்று கம்மன்பில கூறினார்.

சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவருடைய குழுவினரின் நடவடிக்கைகள் குறித்து 2019 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 13 அறிக்கைகள் ரவி செனவிரத்னவுக்கு கிடைத்துள்ளதாகவும், மாவனல்லையில் புத்தர் சிலை உடைக்கப்பட்டமை, 2018, 2017 இல் காத்தான்குடியில் ஏற்பட்ட மத ரீதியிலான பதற்றம், 2018 இல் வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை, 2019 இல் வண்ணாத்திவில்லுவில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டமை போன்ற பல முக்கிய விசாரணைகளுக்கு பொறுப்பாக இருந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது என்றும் கம்மன்பில தெரிவித்தார்.

சஹ்ரான் மற்றும் அவரது குழுவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ரவி செனவிரத்னவுக்கு வாய்ப்பு கிடைத்ததாகக் கூறிய கம்மன்பில, முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் சி.ஐ.டி ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்ததாகவும், அரச புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும், ஆனால் ஈஸ்டர் தாக்குதல்களை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அவர் தவறியதாகவும் தெரிவித்தார்.

ரவி செனவிரத்னவுக்கு எதிராக அலட்சியம் காட்டிய குற்றச்சாட்டின் பேரில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இரண்டாவது அறிக்கையின் 41வது பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக ரவி செனவிரத்ன குறிப்பிடப்பட்டிருப்பதாக அந்த அறிக்கைகள் தெளிவாகக் கூறியுள்ளன. ஆயினும் செனவிரத்ன தற்போது பொலிஸாருக்குப் பொறுப்பான அமைச்சின் உயர் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

ரவி செனவிரத்னவின் தலைமையில் புதிய விசாரணை நடத்தப்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உறவினர்களுக்கும் நீதி கிடைக்குமா என்றும் பொலிஸாரிடம் வெளிப்படையான விசாரணையை எதிர்பார்க்க முடியுமா என்றும் கம்மன்பில கேள்வி எழுப்பினார்.

இவ்வாறான சூழ்நிலையில், பொலிஸ் துறைக்குப் பொறுப்பான பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்னவை நியமிப்பது குறித்து கவலைகள் எழுந்துள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

“ஒரு பக்கம், பொலிஸார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில், பொலிஸாரால் கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி அவர் ஒரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்திருந்தார். அதே நேரத்தில், அவர் பொலிஸ் துறையின் முக்கிய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில், பொலிஸ் துறை பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ள முடியுமா என்றும் கம்மன்பில கேள்வி எழுப்பினார்.

ரவி செனவிரத்ன குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த உண்மைகளை காட்டி, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்னவை நியமித்தமை தவறு என நாம் சுட்டிக்காட்டிய போதிலும், ஜனாதிபதி இதனை கவனத்தில் கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசாங்கின் பல நியமனங்களில் – ஜனாதிபதியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவியவர்களுக்கு வழங்கப்பட்டவை என சுட்டிக்காட்டிய கம்மன்பில, வெளியிடப்படாத இரண்டு ஈஸ்டர் தாக்குதல் அறிக்கைகள் வெளியிடப்படாவிட்டால், நியமிக்கப்பட்டவர்களுக்கு எதிரான உண்மைகளை மறைப்பதற்கு ஜனாதிபதிக்கு உதவியிருக்கலாம் என்றார்.

இதன் மூலம் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ரவி செனவிரத்னவை உடனடியாக நீக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மனபில கோரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டு அறிக்கைகளையும் வெளியிடாமல் வைத்திருக்க முயற்சித்து பொதுமக்களிடம் தகவல்களை மறைத்து – தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்ததற்காக ஜனாதிபதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தக் கோரிக்கையை ஜனாதிபதி நிறைவேற்றத் தவறினால், அடுத்த நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கம்மன்பில எச்சரித்துள்ளார்.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, கடந்த வாரம் அரசாங்கத்தை எச்சரித்த பின்னர், இரண்டு அறிக்கைகளின் விவரங்களை வெளியிட்டதோ, அரசாங்கம் அவற்றை வெளியிடத் தவறினால், அது குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு வெளியிடுவேன் என தெரிவித்திருந்தார்.