தலைப்புச் செய்திகள்

மு.காவின் அம்பாறை மாவட்ட வேட்புமனுவில் ஹரீஸ் இல்லை: எதிர்பாளர்கள் கையொப்பம் இட்டனர்

– மரைக்கார் –

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட வேட்புமனுவில் இடம் வழங்கப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அவருக்கு வேட்புமனுவில் இடம் வழங்கினால் – தாங்கள் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடுவதில்லை எனக்கூறி – புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.எல். தவம், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் மற்றும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோர், சற்று முன்னர் வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், அந்தக் கட்சியின் தீர்மானங்களை மீறி – கடந்த அரசாங்கங்களுக்கு ஆதரவு வழங்கினார். குறிப்பாக அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை ஆதரித்தார். எனவே, அவருக்கு இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட முஸ்லிம் காங்கிரஸ் சந்தர்ப்பம் வழங்கக் கூடாது என தெரிவித்தே – உதுமாலெப்பை, தவம், ரஹ்மத் மன்சூர் மற்றும் சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் – புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

ஆனாலும், ஹரீஸை போன்று முன்னைய அரசாங்கங்களுக்கு கட்சியின் தீர்மானங்களை மீறி ஆதரவு வழங்கியதோடு, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கிய, அம்பாறை மாவட்டத்தின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிமுக்கு, இம்முறை முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், அதனை மேற்படி நால்வரும் எதிர்க்கவில்லை என்பது ஏன் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இது இவ்வாறிருக்க, சுயேட்சைக் குழுவொன்றில் நளைய தினம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என்கிற பேச்சுக்களும் உள்ளன.

தொடர்பான செய்தி: மு.கா வேட்புமனுவில் இழுபறி; “ஹரீஸ் இருந்தால் நாங்கள் இல்லை”: உதுமாலெப்பை உள்ளிட்ட நால்வர் வெளியேற்றம்