
மது அருந்துவதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்க்க அரசு ஆண்டுதோறும் 237 பில்லியன் ரூபாயை செலவிடுவதாக, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
மது அருந்துவதால் ஆண்டுக்கு சுமார் 03 மில்லியன் அகால மரணங்கள் ஏற்படுவதாக உலகளாவிய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. கவலையளிக்கும் வகையில், இந்த இறப்புகளில் 10 இல் 8 தடுக்கக்கூடியவை என்றும், தொற்று அல்லாத நோய்களுடன் இணைக்கப்பட்டுள்ளன எனவும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் நிர்வாகப் பணிப்பாளர் சம்பத் டி. செரம் கூறியுள்ளார்.
இலங்கையில் – இதய நோய், புற்றுநோய் மற்றும் சுவாச நோய்கள் போன்ற தொற்றா நோய்களில் மதுபானத்தினால் ஏற்படும் நோய் முன்னணியில் உள்ளது.
இலங்கையில் மது அருந்துதல் ஒவ்வொரு நாளும் 50 நபர்களின் மரணத்திற்கு காரணமாகிறது என்றும், இதனால் வருடாந்தம் 15,000 முதல் 20,000 உயிர்கள் வரை உயிரிழப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2022 ஆம் ஆண்டில், மது வரி மூலம் 165 பில்லியன் ரூபாய் வருமானத்தை அரசு பெற்றது. ஆனால் மது நுகர்வினால் ஏற்படும் உடல் நலப் பிரச்சினைகளைத் தீர்க்க 237 பில்லியன் ரூபாயை அரசு செலவிடுகிறது.



