கிழக்கு மாகாண ஆசிரியர்களின் இடமாற்றங்கள் ரத்து: வழக்கு தொடர்ந்தவர்களுக்கு வெற்றி

🕔 October 3, 2024

கிழக்கு மாகாண பாடசாலைகளில் இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்களால், பாதிக்கப்பட்ட நிலையில் – அந்த இடமாற்றங்களை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த ஆசிரியர்களின் இடமாற்றங்களை ரத்துச் செய்வதாக, கிழக்கு மாகாண சபையின் சட்டப் பிரிவின் சட்டத்தரணிகள் இன்று (03) நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களில் பல முறைகேடுகள் இருப்பதாகக் கூறி, பாதிக்கப்பட்ட 14 ஆசிரியர்களினாலும் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர் சங்கத் தலைவர் ப்ரியந்த பெர்னாண்டோ ஆகியோரினாலும் கல்முனை மாகாண மேல் நீதிமன்றத்தில் ரிட் (writ) மனு கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஆசிரியர் இடமாற்ற சபை மற்றும் ஆசிரியர் இடமாற்ற மேன்முறையீட்டு சபை ஆகியன சரியாகக் கட்டமைக்கப்படவில்லை என்றும், கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றக்கொள்கைக்கு முரணாக ஆசிரியர் இடமாற்றங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறி – தங்களது இடமாற்றங்களை ரத்து செய்யுமாறு, தங்களுடைய மனுவில் கோரியிருந்தனர்.

இந்தப் பின்னணியில் இன்று (03) குறிதத வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகள் சார்பில் தோன்றிய கிழக்கு மாகாண சபையின் சட்டப் பிரிவின் சட்டத்தரணிகள்; பாதிக்கப்பட்ட அனைத்து மனுதாரர்களினதும் இடமாற்றங்களினை ரத்து செய்வதாகவும் அவர்கள் இடமாற்றத்துக்கு முன்னர் எந்தப் பாடசாலைகளில் கற்பித்தார்களோ, அந்தப் பாடசாலைகளில் அவர்களை மீள அமர்த்துவதாகவும், எதிர்வரும் காலத்தில் ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை கண்டிப்பாக பின்பற்றி இடமாற்றங்கள் செய்வதாகவும் உறுதியளித்தனர்.

இந்த வழக்கில் சட்டத்தரணிகள் றாஸி முஹம்மட் ஜாபிர் மற்றும் எப்.எச்.ஏ. அம்ஜாட் ஆகியோர் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் தோன்றி – வாதங்களை முன்வைத்திருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்