தலைப்புச் செய்திகள்

உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்கத் தவறிய, குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு விளக்க மறியல்

குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவை விளக்க மறியலில் வைக்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.

இலத்திரனியல் முறையில் வீசா விநியோகிப்பதற்கு அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி – உச்ச நீதிமன்றம் கடந்த ஓகஸ்ட் 02ஆம் திகதி பிறப்பித்த இடைக்கால தடையுத்தரவிற்கு அமைவாக செயற்படத் தவறியதால் அவரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய நீதியரசர்கள் அடங்கிய குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இலத்தரனியல் வீசா முறைமையை ரத்துச் செய்து, பழைய முறையில் வீசா விநியோகிக்குமாறு, குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

ஒரு மாதத்துக்கு அதிக காலம் சென்றாலும், இதுவரை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய செயற்படாததன் காரணமாக, குடிவரவு – குடியல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியுள்ளதாகவும் அவருக்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கடந்த 13ஆம் திகதி நகர்த்தல் பத்திரம் ஊடாக பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரஊப் ஹக்கீம் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அன்றைய தினம் விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம், குடிவரவு – குடியல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் வேண்டுமென்றே உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த தவறியமை தெரியவருவதால், அவருக்கு எதிராக நீதிமன்ற அவதூறு வழக்கை தாக்கல் செய்யுமாறு மனுதாரர்களுக்கு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.

அதற்கமைய, மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குடிவரவு – குடியல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு எதிராக மனுதாரர்கள் நீதிமன்ற அவதூறு குற்றச்சாட்டின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததுடன், அந்த குற்றப்பத்திரிகை திறந்த நீதிமன்றத்தில் அவருக்கு வாசித்து காண்பிக்கப்பட்டது.

நாட்டின் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியமை மிகவும் பாரதூர நிலை என தெரிவித்த நீதியரசர்கள், சட்டவாட்சியை பாதுகாக்கும் பொறுப்பு தமக்கு உள்ளதாக அறிவித்தனர்.

அதனடிப்படையில், குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தை கைது செய்து விளக்கமறியலில் வைக்குமாறும் நீதியரசர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை அவரை விளக்கமறிலில் வைக்குமாறும் நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

இலுக்பிட்டியவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டமையை அடுத்து, தான் குற்றமற்றவர் என அவர் கூறினார்.

இந்த உத்தரவை வேண்டுமென்றே புறக்கணிக்கவில்லை என்றும், ஒரு வாரத்திற்குள் அதனை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.