
இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி தேர்தலில் முதன் முறையாக விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க அதிக வாக்குகளைப் பெற்றுள்ள போதும், அவர் 50 வீதத்துக்கும் அதிக வாக்குகளைப் பெற்றுக் கொள்ளாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அனுர குமார திசாநாயக்க 56 லட்சத்து 34 ஆயிரத்து 915 வாக்குகளைப் பெற்றுள்ளார். அது செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கையில் 42.31 வீதமாகும்.
இதேவேளை, இரண்டாவது அதிக வாக்குகளை ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச பெற்றுள்ளார். அவர் 43 லட்சத்து 63 ஆயிரத்து 35 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது செல்லுபடியான மொத்த வாக்குகளில் 32.76 வீதமாகும்.
மேற்படி இருவருக்கும் இடையில் சுமார் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசம் உள்ளது.
எனவே, அனுர குமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரை போட்டியாளர்களாகக் கொண்டு – அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விருப்பு வாக்குகளை எண்ணும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி அனுர குமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரைத் தவிர்த்து ஏனைய 36 ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள 02ஆம் மற்றும் 03ஆம் விருப்பு வாக்குகள் அனுர மற்றும் சஜித் ஆகியோருக்கு எத்தனை வழங்கப்பட்டுள்ளன என்பதை எண்ணும் நடவடிக்கையே தற்போது நடைபெறுகிறது.
அனுர மற்றும் சஜித் ஆகியோர் முதல் கட்டத்தில் பெற்ற வாக்குகளுடன், அவர்களுக்கு வழங்கப்பட்ட விருப்பு வாக்குகள் சேர்க்கப்பட்டு – அதில் அதிக எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்றுக் கொள்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
சிலவேளை, முதற் கட்ட வாக்குகளுடன் விருப்பு வாக்குகள் சேர்க்கப்பட்ட பின்னர், அனுர மற்றும் சஜித் ஆகியோர் சமனான வாக்கு எண்ணிக்கையைப் பெற்றுக் கொண்டால், குலுக்கல் முறையில் ஜனாதிபதி வெற்றியாளர் தெரிவு செய்யப்படுவார்.



