
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பிரதமர் பெண்ணாக இருக்கலாம் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
செப்டெம்பர் 21ஆம் திகதி வெற்றி பெற்றதன் பின்னர் -அரசியலமைப்பின் 47.3 சரத்தின் கீழ், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுடன் புதிய அமைச்சரவையொன்று நியமிக்கப்பட்டு நாடாளுமன்றம் கலைக்கப்படும் என, மினுவாங்கொடையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் கூறினார்.
“அநுரகுமார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தேசிய மக்கள் சக்தி எவ்வாறு அரசாங்கத்தை நடத்த முடியும் என – எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அனுர ஜனாதிபதியான பின்னர் – கொழும்பு மாவட்டத்தில் விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள லக்ஷ்மன் நிபுனாராச்சி புதிய நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார். அப்போது, நாங்கள் நான்கு பேர் கொண்ட அமைச்சரவையை நியமிப்போம். ஒரு புதிய பிரதமரை நியமிப்போம், ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
சுவிட்சர்லாந்தில் ஏழு பேர் கொண்ட அமைச்சரவை மட்டுமே இருப்பதாகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு – புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் வரை, நான்கு பேர் கொண்ட அமைச்சரவை இரண்டு மாதங்களுக்கு இயங்க முடியும் என்றும் விஜித ஹேரத் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவதற்கு தேசிய மக்கள் சக்தியில் முக்கிய பிரமுகர்கள் யாராவது இருக்கிறார்களா என – மக்கள் கேள்வி எழுப்புவதாக கூறிய அவர், நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்த வைத்தியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் என பல தொழில் வல்லுநர்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
“ஹரிணி அமரசூரிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்னர் – உங்களில் யாருக்காவது அவரைத் தெரியுமா?, அவரைநாட்டுக்குத் தெரியாது. ஆனால், இப்போது அவர் நாடு முழுவதும் அறியப்பட்டவர். எங்களிடம் இவ்வாறான பல பேர் உள்ளனர்” எனவும் அவர் தெரிவித்தார்.



