
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்த தீர்மானத்தை அந்தக் கட்சி மீளவும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அந்தத் தீர்மானத்துடன் தனக்கு உடன்பாடு இல்லை என, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் தமிழ்ப் பாெது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியாவில் இன்று (16) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் விசேட குழு கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்பாேதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழரசுக் கட்சியின் இன்றைய விசேட குழுக் கூட்டத்திலும் மத்திய குழுக் கூட்டத்தில் எடுத்த முடிவை நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியுள்ளேன்.
சிங்கள தேசிய வேட்பாளர்கள் எவரினதும் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தமிழர்களின் அரசியல் உரிமை, தன்னாட்சி தொடர்பில் எதுவும் இல்லை. இதனால் நான் அதனை ஏற்றுக்காெள்ளவில்லை.
இந்நிலையில், தமிழர்கள் தங்களின் தேசத்தின் இருப்பையும், தங்களின் அடிப்படை அரசியல் உரிமைகளையும் நிலைநிறுத்துவதற்கு தமிழ்ப் பாெது வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் என்பதை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டு வந்துள்ளேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



