
ஜனாதிபதித் தேர்தலின் போது – வாக்காளர்கள் தமது கைத்தொலைபேசிகளை வாக்களிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்காளர்கள் தத்தமது வாக்காளர் அட்டை, ஆள் அடையாள அட்டை மற்றும் தேவையானால் பேனாவை மாத்திரமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறியுள்ளார்.
“வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் அட்டை மற்றும் செல்லுபடியாகும் அடையாள அட்டையை ஆகியவற்றை மட்டுமே வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்” என அவர் கூறியபோது, வாக்காளர்கள் பேனாவை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்களா என்று வினவப்பட்டது.
“பேனாவை எடுத்துச் செல்வதில் எங்களுக்கு கவலையில்லை, ஆனால் வாக்குச்சாவடிகளில் பேனாக்கள் இருப்பதால் அதுவும் தேவையில்லை. அவர்கள் வாக்காளர் அட்டை மற்றும் செல்லுபடியாகும் அடையாள அட்டையை ஆகியவற்றை மட்டும் எடுத்துச் செல்வதை நாங்கள் விரும்புகிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர்கள் தமது கைத்தொலைபேசிகளை வாக்களிப்பு நிலையத்திற்கு வெளியே வைத்திருக்கும் வசதிகள் இருக்காது எனவும், வாக்காளர்கள் கையடக்கத் தொலைபேசிகளை வீட்டிலேயே விட்டுச் செல்வதை தாம் ஊக்குவிப்பதாகவும் ரத்நாயக்க மேலும் கூறியுள்ளார்.
“ஒவ்வொருவரின் வாக்குச் சாவடியும் அவரவர் கிராமத்தில் இருப்பதால், அவர்கள் தங்கள் கைத்தொலைபேசியை வீட்டில் வைத்துவிட்டு, வாக்குச் சாவடிக்குச் சென்று, வாக்களித்து, வீடு திரும்பலாம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்றாகச் சென்றால், மற்றவர்கள் வாக்களித்துவிட்டு வெளியே வரும்வரை- ஒருவர் அனைவரின் மொபைல் ஃபோனையும் வைத்துக் கொள்ளலாம்” என்றார்.
கடந்த தேர்தல்களின் போது வாக்குச்சாவடி மையங்களுக்குள் கைத்தொலைபேசி அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தபால் வாக்களிப்பின் போது, வாக்குச் சீட்டு புகைப்படம் எடுக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த விதி இப்போது கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



