
தேசிய மக்கள் சக்தியின் உயர் பீட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.டி. லால்காந்த – சர்ச்சைக்குரிய பௌத்த மதகுருவும், பொதுபல சேனா அமைப்பின் செயலாளருமான ஞானசார தேரரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
ஞானசார தேரரை சந்தித்து லால் காந்த ஆசி பெறும் படங்களை, ஞானசார தேரர் தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று (04) வெளியிட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க, கண்டியிலுள்ள ஒரு ஹோட்டலில் நேற்று முன்தினம் (03) தேசிய மக்கள் சக்தியின் உயர்பீட உறுப்பிரும் முன்னாள் அமைச்சருமான லால்காந்தவுக்கும் பாரியளவில் கல்குவாரிகளை நடத்தும் 25 தொழிலதிபர்களுக்குமிடையில் சந்திப்பொன்று நடந்த பின்னர் வழங்கப்படவிருந்த பகலுணவு விருந்துக்கு – தேர்தல் ஆணைக்குழு தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி விடயம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப் பெற்றதை அடுத்து, குறித்த ஹோட்டலுக்கு வந்த கண்டி தேர்தல் அலுவலக அதிகாரிகள், தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு பகலுணவு விருந்தை வழங்குவது பொருத்தமற்றது எனத் தெரிவித்து, அங்கு வழங்கப்படவிருந்த பகல் உணவுக்கு தடைவிதித்தனர்.
தேசிய மக்கள் சக்தியினர் – ஊழல், மோசடி மற்றும் சட்ட மீறல்களுக்கு எதிராக தாம் ஆட்சிக்கு வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக, அவர்களின் தேர்தல் மேடைகளில் பேசி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.




