
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மாதாந்த சம்பளம் தொடர்பான சொத்துப் பிரகடனங்களின்படி, தொழிலதிபர் திலித் ஜெயவீர அதிக வருமானம் ஈட்டும் ஜனாதிபதி வேட்பாளராக உள்ளார். அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறைந்த வருமானம் ஈட்டும் வேட்பாளர் என தெரியவந்துள்ளது.
அவர்களது சொத்துப் பிரகடனங்களின்படி, தொழிலதிபர் திலித் ஜயவீர 01 கோடியே 65 லட்சம் ரூபாயினை மாதாந்த வருமானமாகப் பெறுகிறார். திலித் ஜெயவீர இலங்கையில் உள்ள முக்கிய ஊடக நிறுவனம் உட்பட பல வணிகங்களைச் சொந்தமாக வைத்திருக்கின்றார்.
அவரைத் தொடர்ந்து முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மாதாந்த வருமானமாக 13 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை பெறுகிறார். முழுநேர அரசியல்வாதி என்பதைத் தவிர விஜயதாச ராஜபக்ஷ வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாக அறியப்படுகிறார்.
இவர்களைத் தவிர – மற்றைய அனைத்து முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களும் மாதாந்த வருமானமாக 05 லட்சம் ரூபாய்க்கும் குறைவாகவே வருமானம் பெறுவதாகத் தெரிவித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் அரசாங்க சம்பளம் பெருகின்றனர்.
அந்த வகையில், முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ஷ மாத வருமானமாக, 04 லட்சத்து 54,285 ரூபாயை பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அவரைத் தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மாதாந்த வருமானமாக 03 லட்சத்து 17,785 ரூபாயையும், மக்கள் போராட்ட இயக்கத்தின் வேட்பாளர் நுவான் போபகே 03 லட்சம் ரூபாயையும் வருமானமாக பெறுவதாக தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 02 லட்சத்து 95,681 ரூபாயை மாதாந்த வருமானமாகக் காட்டியுள்ளார். அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 02 லட்சத்து 56,802 ரூபாயினைமாதாந்தச் சம்பளமாகக் காட்டியுள்ளார்.
சொத்துப் பிரகடனங்களின்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகக் குறைந்த மாத வருமானம்பெறுபவராக உள்ளார். அவர் தனது மாதாந்த வருமானமாக 01 லட்சத்து 79,691 ரூபாயை பெறுவதாக தெரிவித்துள்ளார்.



