“சஜித்துக்கு ஆதரவு”: மக்கள் காங்கிரஸின் தீர்மானத்தை தலைவர் றிஷாட் பதியுதீன் அறிவித்தார்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் என, அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் இன்று (14) தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்கும் ஊடக சந்திப்பு – இன்று (14) மாலை வெள்ளவத்தை, கிரீன் பெலஸ் மண்டபத்தில் இடம்பெற்ற போதே – அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீடம் மற்றும் அரசியல் அதிகாரபீடம் ஆகியன, இன்று மாலை கொழும்பில் கூடி, இந்தத் தீர்மானத்தை ஏகமனதாக எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
”கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக – வடக்கு, கிழக்கில் பல இடங்களுக்குச் சென்று மக்களையும் மாவட்ட பிரதிநிதிகளையும் கட்சித் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் சந்தித்து, இந்த விடயத்தில் கருத்துக்களைக் கேட்டறிந்தோம். அதற்கு முன்னதாக, கட்சியின் உயர்பீடத்திலும் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினோம். இறுதியாக இன்று மாலை கட்சியின் உயர்பீடம் மீண்டும் கூடியதுடன், உயர்பீட உறுப்பினர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்துகொண்டோம்”.
”அதேபோன்று, மக்களின் கருத்துக்களும் உயர்பீடத்தில் முன்வைக்கப்பட்ட பின்னரே, சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது” என, றிஷாட் பதியுதீன் இதன்போது கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்; “ஆதரவாளர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த போது, கட்சியின் உயர்பீடம் எடுக்கும் முடிவையே தாங்கள் ஆதரிப்பதாகவும் உறுதியளித்தனர். எனவே, சஜித் பிரேமதாசவை வெல்ல வைப்பதற்கான தீவிரப் பிரசாரங்களில் ஈடுபடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது” என்றார்.