
ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவராகத் யஹ்யா சின்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
காஸாவிலுள்ள யஹ்யா சின்வர் – ஹமாஸ் அமைப்பின் உயர் மட்டத் தலைவர்களில் ஒருவராவார்.
ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவராக பதவி வகித்த இஸ்மாயில் ஹனியே, ஜூலை 31 அன்று ஈரானில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் இடத்துக்கு யஹ்யா சின்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று செவ்வாய்கிழமை ஹமாஸ் தெரிவித்துள்ளது.
‘ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவராக தியாகி தளபதி இஸ்மாயில் ஹனியேவுக்குப் பிறகு, தளபதி யஹ்யா சின்வர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்’ என்று அந்த அமைப்பு ஒரு சுருக்கமான அறிக்கை ஊடாக குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலிய எல்லைக்குள் கடந்த வருடம் ஒக்டோபர் 07ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலின் மூளையாக 61 வயதான சின்வர் – இஸ்ரேலால் பார்க்கப்படுகிறார். அந்தத் தாக்குதலில் 1,100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு, 200 க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர்.
காஸா மீது இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலையில் 40,000 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 2.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர். மேலும் தீவிரமான பட்டினி மற்றும் சுகாதார பிரச்சினைகளும் காஸாவில் ஏற்பட்டுள்ளனர்.
ஹனியேவின் படுகொலை – இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. காஸா – இஸ்ரேல் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்த நிலையிலேயே இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். குறித்த பேச்சுவார்த்தையில் அவர் ஹமாஸ் தரப்பின் பிரதான நபராக இருந்தார்.
யஹ்யா சின்வர் – காஸாவின் அகதிகள் முகாமில் பிறந்தவர். இஸ்ரேலுடன் ஒத்துழைப்பதாக சந்தேகிக்கப்படும் பலஸ்தீனியர்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கையை மேற்கொண்ட அல்-மஜ்த் பாதுகாப்பு பிரிவின் முன்னாள் தலைவராகவும் அவர் பதவி வகித்தார்.
ஒக்டோபர் 07 அன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் (ஐ.சி.சி) பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பல ஹமாஸ் தலைவர்களில் யஹ்யா சின்வரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு பிரதானி யோவ் கேலன்ட் உள்ளிட்டோருக்கு எதிராகவும், காஸாவில் போர்க் குற்றங்கள் புரிந்ததமைக்காக – சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.



