
அரசின் 6.37 பில்லியன் ரூபாய் நிதியை கடந்த 05 முதல் 06 வருடங்களாக செலவிட்டு ஆரம்பிக்கப்பட்ட 34 அபிவிருத்தி திட்டங்கள் – எவ்வித பயனுமின்றி கைவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற குழு இன்று (07) தெரிவித்துள்ளது.
சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் அஜித் மன்னபெரும – நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து இதனைக் கூறியுள்ளார்.
நிதிப் பற்றாக்குறையால் 23 திட்டங்கள் கைவிடப்பட்டதாகவும், 11 திட்டங்கள் சில காரணங்களால் கைவிடப்பட்டதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.
கைவிடப்பட்ட திட்டங்களில் பொலன்னறுவையில் 1.1 பில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மெத்சிறிபாய நிர்வாக வளாகம் மற்றும் 40 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஹட்டன் புகையிரத நிலையம் ஆகியவை உள்ளடங்கும்.
அரசியல் நோக்கங்களுக்காக – அரசியல் தலைவர்களால் பொது நிதியை வீணடிக்கும் வகையில், இது போன்ற திட்டங்கள் தொடங்கப்படுவதை அவதானித்த அவர், அத்தகைய திட்டங்களை தொடங்குவதற்கு முன்னர், அரசியல் சார்பற்ற குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைத்துள்ளது எனவும் தெரிவித்தார்.



