தலைப்புச் செய்திகள்

முன்னாள் DIG வாஸ் குணவர்தனவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பு, 09 வருடங்களுக்குப் பின்னர் உறுதியானது

வர்த்தகர் முஹமட் சியாம் 2013 ஆம் ஆண்டு கடத்தி கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரின் மகன் ரவிந்து குணவர்தன மற்றும் நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, உச்ச நீதிமன்றம் இன்று (08) உறுதி செய்தது.

தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையிலிருந்து – தம்மை விடுவிக்குமாறு கோரி, வாஸ் குணவர்தன மற்றும் ஏனைய பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை நிராகரித்ததுடன், உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதன்படி, நீண்ட கால விசாரணைக்குப் பிறகு வழங்கப்பட்ட தீர்ப்பு, குற்றம் சாட்டப்பட்டவர்களின் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது. இதில் ஒரு உதவிப் பொலிஸ் பரிசோதகர் மற்றும் மூன்று போலீஸ் கான்ஸ்டபிள்களும் அடங்குவர்.

பம்பலப்பிட்டியைச் சேர்ந்த வர்த்தகர் சியாம் என்பவரை கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2015ஆம் ஆண்டு மேற்படி நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அதற்கு எதிராக அவர்கள் உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்தமைக்கு அமைய, தற்போது அவர்களுக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.