
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் பயணித்த வாகனம், இன்று (13) புத்தளம் – கருவலகஸ்வெவ பகுதியில் வீதியை விட்டு விலகியதில் விபத்துக்குள்ளானது.
ஆயினும், நாடாளுமன்ற உறுப்பினருக்கு இதன் போது – எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுதீன் அநுராதபுரம் ஊடாக புத்தளம் நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்த போது, பிரதான வீதிக்குள் திடீரென மோட்டார் சைக்கிள் ஒன்று பிரவேசித்துள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் மீது – மோட்டார் சைக்கிள் மோதுவதை, சாரதி தவிர்க்க முயற்சித்ததில் – குறித்த வாகனம் வீதியை விட்டு விலகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆயினும் நாடாளுமன்ற உறுப்பினருக்கோ, மோட்டார் சைக்கிளில் பயணித்த நபருக்கோ எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இருந்தபோதும நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனத்துக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் சிறிய அளவில் பாதிப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் நேற்றைய தினம் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட றிசாட் பதியுதீன், இன்று காலை புத்தளம் நோக்கிப் பயணித்த போது, இந்த விபத்து நடந்துள்ளது.



